வெள்ளி, 4 ஜனவரி, 2013

ஒரு சமூகமாக நாம் எப்படி செயல்படுகிறோம் ?

                                                            பொது சுகாதாரம்

நாம் வாழும் சமூகத்தின் அவலங்கள் பல வழிகளில், பல ரூபங்களில் சமீப காலமாக மிகப் பெரிய அளவில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது . சமூக அவலங்கள் என்று கூறும்போது அதில் நம்முடைய பங்களிப்பு தான் பெருமளவில்  இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.. ..அது அவலமானாலும் சரி..ஆக்கமானாலும் சரி.

சமூகமாக நாம் எப்படி செயல்படுகிறோம் என்று பார்த்தோமானால் அதில் கவலை அளிக்கக்கூடிய , திருத்திக் கொள்ளவேண்டிய பல செயல்களை மக்கள்  தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் .

இன்று பொது சுகாதாரத்தை பொறுத்த வரையில் ஒரு சமூகமாக நம் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்று பார்ப்போம்.

 பொது இடங்களில் எச்சில் துப்புவது. பெரும்பாலானவர்கள்  சாலைகள் , ஓடும் வாகனங்களின் உள்ளிருந்து, அரங்குகள்  என்று எந்த இடம் என்று இல்லாமல் , தங்கு தடையில்லாமல்  எச்சில்  துப்புவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  பொது கழிப்பிடங்கள் இருப்பதை பற்றி கவலையே இல்லாமல், சாலையில் சிறு நீர் கழிப்பவர்கள் மிக அதிகம்.

மக்கள் நடமாடுவதற்கு இருக்கும் நடைபாதை ஓரங்களில் கால் வைக்க முடியாதபடி அசிங்கம் பண்ணுவதை பற்றி எந்த கவலையும் அதை செய்பவர்களுக்கு இல்லை.பொது கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பதை பற்றி கூட யாராவது வந்து பாடம் எடுக்க வேண்டுமா என்ன?  இதில் ஏழ்மையை ஒரு காரணமாக கூறி இந்த மாதிரியான செயல்களுக்கு வக்காலத்து வாங்க முடியாது. ஏழ்மையில் அசுத்தத்திற்கு தான் இடமுண்டு. அசிங்கத்திற்கு அல்ல.

ஏனென்றால் ஏழ்மை என்பது பணப் பற்றாக்குறை தானே தவிர சுத்தத்திற்கும், அசிங்கத்திற்கும்  வேறுபாடு தெரியாத மிருக நிலை அல்ல !

மேலும் இந்த மாதிரியான விஷயங்களில் தான் நாம் ஒரு சமூகமாக எவ்வளவு மோசமாக செயல்படுகிறோம் என்பது தெரிகிறது.

பொது கழிப்பறைகள் ஏழை மக்களுக்கானது என்று வைத்துக் கொண்டால், அதை அவர்களால் சுத்தமாக வைத்துக் கொள்ளமுடியவில்லை  எனும்போது, அந்த பகுதியில் இருக்கும் ஓரளவு/மிகுந்த வசதி படைத்த மற்றவர்கள் அதனை சுத்தமாக வைத்திருந்து சுகாதாரத்தை பேண வழிசெய்யலாம்...ஆனால் அப்படி நடக்கிறதா என்றால் இல்லை . இதை அரசாங்கம் தான் செய்யவேண்டும் என்று கைகாட்டுபவர்கள் தான் அதிகம்.

அதை விட கொடுமை இன்றும் பல கிராமங்களில் மனிதர்களை வைத்து மலம் அள்ளும் நிலைமை இருக்கிறது ! இதனை தடை செய்யவும் அரசாங்கம் தான் வரவேண்டும்..! ஏன்...அந்த பகுதி மக்களுக்கு இந்த சமூக குற்றத்தில் பங்கு இல்லையா? எந்த மாதிரியான மனப் போக்கு , இந்த மாதிரியான இழி நிலையை , சகமனிதர்கள் மீது திணிக்கிறது ? சட்டத்தின் மூலம் தான் இதை தடுக்க வேண்டுமா ? சமூகமாக எவ்வளவு சீரழிந்து நிற்கிறோம் !!

எந்த ஒரு அரசாங்க நலத் திட்டமும், மக்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் இல்லாமல் எப்படி வெற்றியடைய முடியும்?

 அடிப்படை சுகாதார வசதிகளை பேணுவதிலேயே இவ்வளவு சிக்கல்களும் , சாதி, மதம், இனம், மொழி, கலாசாரம், பொருளாதார ஏற்றத்தாழ்வு  என்ற பலவையும்  சார்ந்த  மிகக் கேவலமான குறுகிய மனப்போக்கும்  நிறைந்தது தான் நாம் சமூகமாக வாழும் லட்சணம் !!
ஐரோப்பிய நாடுகளில்,[ அமரிக்காவிலும்]..இந்த community living மிக  அழகாக நடக்கிறது. அதுவும் கிராமங்களில் அவ்வளவு அழகாக ஆரோக்கியமாக  நடக்கிறது . மாதத்தின் ஏதாவது ஒரு வார இறுதியில் ஊரின் பொது வெளியில் மக்கள் கூடுவார்கள். எல்லோரும் அவரவரால் முடிந்த உணவை சமைத்து எடுத்து வருவார்கள். விளையாட்டுகள் இருக்கும். ஒருவருக்கொருவர் விஷயங்களை பகிர்ந்து கொள்வதோடு மட்டும் இல்லாமல், இல்லாதவர்களுக்கு என்ன மாதிரி தேவை இருக்கிறது என்று தெரிந்து அந்த இடத்திலேயே யார் யாருக்கு அதை செய்து கொடுக்க முடியும் என்று முடிவு செய்து அதை வரும் நாட்களில் நடத்தி விடுகிறார்கள். நாங்கள் தான் அரசாங்கத்திற்கு வரி கட்டுகிறோமே, அரசாங்கம்தான் இதை பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அலட்சியம் காட்டுவதில்லை.  Community living-ன் உண்மையான அர்த்தம் இதுதான்.

நம இறுகிய கலாசாரம் பல மக்களோடும் குடும்பம் கும்பமாக கலந்து பழகும் பழக்கத்தை அனுமதிப்பதில்லை. பண்டிகைகளைக் கூட, தனிதனி குடும்பமாக , அந்தந்த குடும்பங்களுக்குள்ளே தான் கொண்டாடும் பழக்கம் இருக்கிறது. இது தான் நாம் சமூகமாக எப்படி ஆக்கபூர்வமாக செயல்படுவது என்று தெரியாமல் நம்மை அன்னியப் படுத்தி வைத்திருக்கிறது.

நம் தமிழ்நாட்டில்,community living பற்றிய இடைவிடாத, நடைமுறை பயிற்சிகள் தான் உடனடி தேவை. இதை அரசியல் கட்சிகளால் செய்யமுடியும். ஏனெனில் குக்கிராமங்கள் தொடங்கி பெரிய நகரங்கள் வரை மக்களோடு பரிச்சயம் உள்ளவர்கள், அவர்களோடு  நெருங்கி உறவாடுபவர்கள் அவர்கள் தான்.

ஒரு ஜனநாயக நாட்டில் உண்மையான அரசியல் என்பது அரசியல் கட்சிகளின் பைசா பிரயோஜனம் இல்லாத வெட்டித்தனமான போராட்டங்கள் அல்ல. மக்களோடு இணைந்து , சமூகத்தின் ஒரு அங்கமாக தங்களை இணைத்துக் கொண்டு , ஆரோக்கியமான சமூகமாக எப்படி வாழ்வது என்பதை கற்றுக் கொடுப்பதும், கற்றுக் கொள்வதும், அப்படி வாழ்வதும்தான் !

இனியாவது அப்படி செய்யாத எந்த அரசியல் கட்சியையும், அரசியல்வாதியையும், நம்பாமல் இருப்பதுதான் சாதாரண மக்களின் சமூக பொறுப்புணர்வுக்கு முதல் படி.

ஆணாதிக்க சிந்தனையும், செயலும் - ஒரு சிறிய உதாரணம்


சமீபத்தில் தோழி ஒருவர் பெண்களை சமமாக பாவிக்கும்  அருமையான ஆண்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று கூறி சான்றாக ஒரு புத்தகத்தில் வந்திருந்த கட்டுரையை காட்டினார்.

என்ன புத்தகம், வார இதழா ...மாத இதழா எனபது மறந்துவிட்டது. ஆனால் அது  பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது.

தங்கள் திருமணம் காதல் திருமணம் என்றும் மனைவி வேலைக்கு போய் பொருளாதார தேவைகளை கவனித்துக் கொண்டதால் , தான் தன எழுத்து பணிகளை தடையின்றி செய்யமுடிந்ததாக கூறி இருந்தார்.
குழந்தைகளை பார்த்துகொள்வதற்காக, மனைவி பின்னர் பணியிலிருந்து விலகி விட்டாராம்.

இதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை.

மனைவியின்  இந்த 'புரிதலுக்காக' பதிலுக்கு தான் அவரை எங்கு வேண்டுமானாலும் தனியாக பயணம் செய்யவும், நினைத்ததை செய்யவும் அனுமதித்திருப்பதாக எழுதி இருக்கிறார்.

ஒரு குடும்பத்தையே நிர்வகித்து,  அதன் பொருளாதார தேவைகள் மற்றும் குழந்தை வளர்ப்பு என்று ஆண், பெண் என இருவர்  வேலையையும் சேர்த்து  செய்த பெண்ணுக்கு , கணவரின் 'அனுமதி' கிடைத்து தான் தனக்கான சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமா ?

ஆணுக்கு பெண் செய்வது புரிதல் என்றால் பெண்ணுக்கு ஆண்  செய்வதும் புரிதாலகத்தானே இருக்க வேண்டும்? இதில் 'அனுமதி' எங்கிருந்து வந்தது ?

வேறு யாரும் எழுதி  இருந்தால் தவறுதலான வார்த்தை பிரயோகம் என விட்டு விடலாம். ஆனால் பிரபல எழுத்தாளர் எனும்போது இதில் தவறுக்கு வாய்ப்பு இல்லை.

இது சமூகத்தின் ஆணாதிக்க மனோபாவத்தையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது ! இதில் எழுத்தாளர் என்ன ...செருப்பு தைப்பவர் என்ன.. வித்தியாசம் ஒன்றும் இல்லை.

ஆணாதிக்க சிந்தனையுடன், அது சார்ந்த செயல்களுடன்  இருக்கிறோம் என்ற realization கூட இல்லாத நிலையில் தான் ஆண்கள் சமூகம் இருக்கிறது.

தவறு என்று தெரிந்து செய்தால் திருத்துவதற்கோ, திருந்துவதற்கோ  வாய்ப்பு உள்ளது. தெரியவே இல்லையென்றால் ...?!!

இதை 'சம உரிமை பேணும் உதாரண ஆணுக்கு அடையாளமாய் காட்டிய என் தோழி போன்ற பெண்களை என்ன செய்வது ...?