செவ்வாய், 4 டிசம்பர், 2012

தமிழகத்தில் பற்றி எரியும் ஜாதி அரசியல் !!

"தலித் அல்லாத நமது சமூகம் எங்கே பாதிக்கப் பட்டாலும் குரல் கொடுப்போம்" -

இதை கூறித்தான் இங்கு தமிழகத்தில் ஜாதிய அரசியல் கட்சிகளும், ஜாதி அமைப்புகளும் ஒன்று திரள்கின்றன.

எந்த தீண்டாமையை எதிர்த்து, எந்த ஜாதீய அடக்குமுறைகளை எதிர்த்து ஜாதீய அரசியல் கட்சிகளும், ஜாதி சங்கங்களும் ஆரம்பிக்கப் பட்டனவோ , அவை திசை மாறி, இன்று தலித்துகளை அடக்கி ஒடுக்கும், தீண்டாமையை வெட்கமின்றி உரக்கச் சொல்லும் அமைப்புகளாக செயல்பட முனைகின்றன.

மிக மோசமான , கடுமையாக கண்டிக்கப் படவேண்டிய ஒரு நிகழ்வு தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது !!

ஜாதி  என்பது பண்பாட்டு அடையாளம் என்பது போய் இன்று அவை தீண்டாமை என்னும் தீயை வளர்க்கும் கருவியாகப் போய்விட்டது.

முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டிய இத்தகைய அபாயகரமான , ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தக் கூடிய செயல்களை மேலும் மேலும் வளர விட்டு வேடிக்கை பார்ப்பது நாகரீகமடைந்த சமூகத்திற்கு ஏற்புடையது அல்ல.

இருபத்திஒன்றாம் நூற்றாண்டு மக்கள் என்று சொல்லிகொள்வதை விடுத்து,  நாகரீகமென்றால் என்னவென்று தெரியாத கற்கால மனிதர்களைப்போல் சிலர் செயல்படுவதை பார்த்துக் கொண்டிருந்தோமானால் நாமும் அந்த குற்றத்தை செய்தவர்களாவோம்.

மனித நாகரீகங்களை மறந்த ஒரு நிலைக்கு சமூகம் தள்ளப் படுமானால் அதற்கு காரணமாக இருக்கும் ஜாதிகள் கட்டுக்குள் வைக்கப் படவேண்டும்..அல்லது அடியோடு ஒழிக்கப் படவேண்டும்.

65 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் ஜாதீய அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக் கொள்கையும் இதற்கு ஒரு பெரும் காரணம்.
ஜாதீய அடிப்படையிலான இட ஒதுக்கீடு இத்தனை வருடங்களாக அமலில் இருந்து கொடுத்த பலன்களை தமிழகம் பார்க்கிறது.

இப்போது ஜாதீய அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை விடுத்து , பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கான நேரம் வந்து விட்டது.

ஜாதி வெறியை , ஜாதி அரசியலை கட்டுக்குள் கொண்டு வரவும், ஜாதிகள் என்ற குறுகிய வட்டத்தை தாண்டிய, தமிழகத்தின் ஒட்டு மொத்த, ஆரோக்கியமான அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய சமூக பொருளாதார முன்னேற்றத்தை அடையவும் இதை செய்ததாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

மக்கள் கையில் தான் இந்த மாற்றம் இருக்கிறது. மக்கள் நினைத்தால் தான் இந்த மாற்றம் நிகழும்.

எதிர்மறையான சம்பவங்களும் பாதிப்புகளும் நிகழும்போது மட்டும் புலம்புவதில் பலன் இல்லை.

எத்தகைய மாற்றங்களை விரும்புகிறோமோ, அத்தகைய மாற்றங்களை கொண்டு வருவதும் மக்களாகிய நம் கையில் தான் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக